Saturday, February 1, 2014

அழியாத கோலங்கள்

மீண்டும் வருமோவந்த வசந்த காலம்
மனதிலே மிளிரும் அழியாத கோலம்
ஆண்டுகள் பலப்பல உருண்டு ஓடியும்
இன்றும் கவர்ந்திடும் இளமை ஜாலம்

அறியா வயதில் எதிர்வீட்டுச் சிறுவனுடன்
அலுக்காது விளையாடி அடித்திட்ட லூட்டி
எரிகுழம்பு தயிர்சாதம் அற்புதக் கதைகளோடு
ஊட்டி விட்டஎன் அன்பான பாட்டி

நாலணா டிக்கட்டில் நண்பருடன் சேர்ந்து
நான்பார்த்து மகிழ்ந்த எம்ஜியார் படங்கள்
காலாற நடந்து காந்திபுரம் பொட்டானிகல்
கார்டன் என்றுநான் சுற்றிய இடங்கள்

காதல் புகுந்திரா குழந்தை நாட்கள்
கேசவன் மோகனின் கசக்காத நட்பு
கீதாலயா ஹாலில் பார்த்த படங்கள்
கல்வெட்டில் பொறித்த காலக் கவிதை

பருவம் வந்ததும் குடிபுகுந்த சென்னை
புரியா உணர்வால் வீழ்த்தியது என்னை
ஒருவித மயக்க நிலையிலே எந்தன்
இளமை எல்லாம் கழிந்தது அங்கே

காலிலே சக்கரம் கட்டிக் கொண்டு
காற்றெனப் பறந்தது காலப் பறவை
நூலிழை இளமை நாடகம் முடித்து
நாற்பதின் முடிவில் நிறுத்தியது என்னை  

நினைத்துப் பார்க்கிறேன் கடந்த நாட்களை
நடந்தது கனவா நனவா அறியேன்
எனக்கென ஒருவரம் இறைவன் தந்தால்
அந்த நாட்களையே மீண்டும் கேட்பேன்










Tuesday, January 21, 2014

காஜல் காய்ச்சல்

உன்இதழ்கள் என்பெயரை உச்சரிக்கும்போது
அதுஇன்னும் இனிப்பாக ஒலிக்கின்றது
கன்னியுந்தன் கூர்விழியை பார்த்திடும்போது
குளிர்ஜுரம்போல் விட்டுவிட்டு அடிக்கின்றது

கனவில்கூட உன்னிடையை தழுவும்போது
காலின்கீழ் உள்ளநிலம் நழுவுகின்றது
நனவிலும் உன்னினைப்பு வந்திடும்போது
என்கையே என்தோளை தழுவுகின்றது

திமிர்பிடித்த இளமையிடம் பயந்தோவுந்தன்
துப்பட்டா ஒதுங்கியே ஓரம்போனது
அமைதியான என்நெஞ்சில் புயலடித்தது
என்னுடலும் வியர்வையிலே ஈரமானது

உதடுகளை சுழித்துநீ கடித்திடும்போது
உன்மத்தம் உச்சந்தலை ஏறுகின்றது
இதற்குமேல் தயங்காதே என்றேயெந்தன்
உள்ளிருக்கும் சைத்தானும் கூறுகின்றது

காமத்தின் வசப்பட்ட காதல்நெஞ்சம்
காலண்டர் தாள்போல படபடக்குது
ஆமெனும் ஒருசொல்லை கேட்டிடவேயென்
ஒட்டுமொத்த உயிரணுக்கள் துடிதுடிக்குது  

மாற்றம்

  
நான் சிரிக்கும் சிரிப்பெல்லாம்
புன் சிரிப்புமில்லை
நடக்கும் பாதைகளில் முட்களுண்டு
ரோஜா விரிப்புமில்லை

நான் சிந்தும் கண்ணீரின்
நிறமுணர்ந்து கொள்ளுங்கள்
மனமுடைந்தா மகிழ்வுடனா
தரமுணர்ந்து கொள்ளுங்கள்

காதலிப்பதுதான்
கடினமென நினைத்திருந்தேன்
வெறுப்பது அதனினும்
கடினமென இன்றுணர்ந்தேன்

நான் சிரிக்கும் சிரிப்பெல்லாம்
புன் சிரிப்புமில்லை
நடக்கும் பாதைகளில் முட்களுண்டு
ரோஜா விரிப்புமில்லை

முகங்களும் அதுவே வாய்பேசும்
மொழிகளும் அதுவே
அகத்தில்தான் ஏதோ
மாற்றங்கள் மெதுவே

நேற்று போல்தான் இன்றும்
பொழுது விடிந்தது
விடியும் போதே என்கண்ணில்
கண்ணீர் வடிந்தது

என்ன நெஞ்சமடா இது
நினைவுகளுடன் வாழத் துடிக்கிறது
என்நிழலும் எனைவிட்டகன்றும்
நேற்றைய திரைப்படம் நடக்கிறது

நான் சிரிக்கும் சிரிப்பெல்லாம்
புன் சிரிப்புமில்லை
நடக்கும் பாதைகளில் முட்களுண்டு
ரோஜா விரிப்புமில்லை



தீண்ட மறுத்த தென்றல்


உன் கரம்பற்றி நான் நிற்கையிலே
என் கால் முத்தமிட்டுச் செல்லும் அலைகள்
நீ இல்லாததால்
என்னைக்கண்டு ஒதுங்குகின்றன

நிலவை விடுத்து
நம்மைப்பார்த்து கண்சிமிட்டிய
நட்சத்திரங்கள்
நீ இல்லாததால்
முகம் திருப்பிக் கொள்கின்றன

தன் களங்கத்தை மறந்து
பளீரிட்ட நிலாவோ
முகத்தில் திரையிட்டுக்கொண்டு
மறைந்து நிற்கின்றது.

ஸ்னேகமாய் சிரித்துச் செல்லும்
நண்டு கூட இன்று
சீற்றத்துடன் பார்க்கிறது.

அன்பே என் அருகில்
நீ இல்லாததால்
தென்றல் கூட என்னை

தீண்ட மறுக்கிறது