Saturday, February 1, 2014

அழியாத கோலங்கள்

மீண்டும் வருமோவந்த வசந்த காலம்
மனதிலே மிளிரும் அழியாத கோலம்
ஆண்டுகள் பலப்பல உருண்டு ஓடியும்
இன்றும் கவர்ந்திடும் இளமை ஜாலம்

அறியா வயதில் எதிர்வீட்டுச் சிறுவனுடன்
அலுக்காது விளையாடி அடித்திட்ட லூட்டி
எரிகுழம்பு தயிர்சாதம் அற்புதக் கதைகளோடு
ஊட்டி விட்டஎன் அன்பான பாட்டி

நாலணா டிக்கட்டில் நண்பருடன் சேர்ந்து
நான்பார்த்து மகிழ்ந்த எம்ஜியார் படங்கள்
காலாற நடந்து காந்திபுரம் பொட்டானிகல்
கார்டன் என்றுநான் சுற்றிய இடங்கள்

காதல் புகுந்திரா குழந்தை நாட்கள்
கேசவன் மோகனின் கசக்காத நட்பு
கீதாலயா ஹாலில் பார்த்த படங்கள்
கல்வெட்டில் பொறித்த காலக் கவிதை

பருவம் வந்ததும் குடிபுகுந்த சென்னை
புரியா உணர்வால் வீழ்த்தியது என்னை
ஒருவித மயக்க நிலையிலே எந்தன்
இளமை எல்லாம் கழிந்தது அங்கே

காலிலே சக்கரம் கட்டிக் கொண்டு
காற்றெனப் பறந்தது காலப் பறவை
நூலிழை இளமை நாடகம் முடித்து
நாற்பதின் முடிவில் நிறுத்தியது என்னை  

நினைத்துப் பார்க்கிறேன் கடந்த நாட்களை
நடந்தது கனவா நனவா அறியேன்
எனக்கென ஒருவரம் இறைவன் தந்தால்
அந்த நாட்களையே மீண்டும் கேட்பேன்










No comments:

Post a Comment